search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலா விமர்சனம்"

    தனுஷ் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, நானா படேகர், ஈஸ்வரி ராவ், ஹீமா குரேசி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘காலா’ படத்தின் விமர்சனம். #Kaala #Rajini
    மும்பை தாராவியில் தனது குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் ரஜினி. மகன், மருமகள் என அனைவரும் ஒரே குடும்பமாக இருக்கிறார்கள். மும்பையில் பெரும் புள்ளியாகவும், கட்சி தலைவராகவும் இருக்கும் நானா படேகர் தாராவி பகுதியில் இருக்கும் குடிசை மக்களை துரத்தி விட்டு, அடுக்குமாடி குடியிருப்பாக மாற்ற நினைக்கிறார். இதற்காக சம்பத் மூலமாக கட்டுமான பணியில் ஈடுபடுகிறார் நானா படேகர். 

    தனியாக ஒரு அமைப்பு வைத்துக் கொண்டு நல்லது செய்து வரும் ரஜினியின் இளைய மகன், சம்பத்திடம் தட்டி கேட்டு போராட்டம் நடத்துகிறார். இதனால் அங்கு பிரச்சனை நடக்க, ரஜினி வந்து சம்பத் ஆட்களை அடித்து விரட்டுகிறார். பின்னர் எம்.எல்.ஏ தேர்தல் வருகிறது. இதில் நானா படேகர் சார்பாக நின்ற சம்பத்தை, ரஜினியின் ஆள் தோற்கடித்து வெற்றி பெறுகிறார்.



    இதனால், அசிங்கப்படும் சம்பத், ரஜினியை தீர்த்து கட்ட நினைக்கிறார். இதற்கிடையில், ரஜினியின் முன்னாள் காதலியான ஹீமா குரேசி வெளிநாட்டில் படித்து விட்டு தாராவிக்கு வருகிறார். இவரும் குடிசைகளை அழித்து அடிக்கு குடியிருப்பாக மாற்ற நினைக்கிறார். இவர் சொல்லும் திட்டத்தில் மக்களுக்கான நல்ல விஷயம் இல்லாததால் ரஜினி எதிர்க்க ஆரம்பிக்கிறார்.

    இறுதியில், தாராவியை அழிக்க நினைக்கும் நானா படேகரையும், ஹீமா குரேசியையும் ரஜினி எப்படி சமாளித்தார். தாராவி மக்களை காப்பாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.



    படத்தில் காலாவாக வரும் ரஜினி தன் குடும்பத்தினருடன் பாசமாகவும், மக்களை எதிர்ப்பவர்களுக்கு சூரனாகவும் நடித்திருக்கிறார். குடும்பத்தினருடன் இருக்கும் காட்சிகளில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மனைவி ஈஸ்வரிராவ்வுடனான ரொமன்ஸ், முன்னாள் காதலியாக வரும் ஹீமா குரேசியுடனா மேலோட்டமான ரொமன்ஸ் என நடிப்பில் ரசிக்க வைத்திருக்கிறார். நானா படேகரை எதிர்க்கும் போது மிரட்டலான நடிப்பில் இளமையான ரஜினியை பார்க்க முடிகிறது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது வருந்துவது நமக்கே அந்த உணர்வை கொடுத்து விடுகிறார். நடன காட்சியில் இளமை துள்ளலுடன் நடித்திருக்கிறார். வசனம் பேசும்போது தீப்பொறி பறக்கிறது. சண்டைக்காட்சிகளில் அதகளப்படுத்தி இருக்கிறார்.

    அரசியல்வாதியாக வரும் நானா படேகரின் நடிப்பு அபாரம். சின்ன சின்ன முக அசைவில் ரசிக்க வைத்திருக்கிறார். ஆர்ப்பாட்டமில்லாத அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார். முக்கிய காட்சிகளில் கூட எளிதாக நடித்து அசால்ட் பண்ணியிருக்கிறார். சம்பத் மற்றும் ரஜினியின் நண்பராக வரும் சமுத்திரகனி ஆகியோர் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். 



    ரஜினியின் மனைவியாக வரும் ஈஸ்வரிராவ் வெகுளித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவருடைய நடிப்பு ரசிகர்களை கவனிக்க வைத்திருக்கிறது. அதுபோல், முன்னாள் காதலியாக வரும் ஹீமோ குரேசி, முதலில் மென்மையான நடிப்பையும், ரஜினியை பகைத்துக் கொள்ளும்போது அதிரடியான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    தாழ்த்தப்பட்டவர்களின் வலியையும் உணர்வையும் ரஜினி மூலமாக தத்துரூபமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித். சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து அவர்களை சிறப்பாக கையாண்டிருக்கிறார். அனைத்து கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். குறிப்பாக ரஜினியை கையாண்ட விதம் அருமை. அரசியல் சார்ந்த கதையை தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்வாதாரத்திற்காக போராடும் தலைவனையும், மக்களையும் அழகாக பதிவு செய்திருக்கிறார். 



    சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது. பின்னணி இசையில் மாஸ் காண்பித்திருக்கிறார். முரளியின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. 

    மொத்தத்தில் ‘காலா’ கிங்.
    ×